உடுமலை-மூணாறு சாலையில் பள்ளம்


உடுமலை-மூணாறு சாலையில் பள்ளம்
x
திருப்பூர்


உடுமலை-மூணாறு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.

உடுமலை-மூணாறு சாலை

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக கேரளா மாநிலம் மூணாறுக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக சுற்றுலா பயணிகள், வனப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் கேரளாவை சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் சென்று வருகின்றனர். உடுமலை- மூணாறு சாலையில் எஸ் வளைவு பகுதியில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அதை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

கேரளா மாநிலத்திற்கு செல்வதற்கு உடுமலை மூணாறு சாலை பெரிதும் உதவிகரமாக உள்ளது. அங்குள்ள காந்தளூர், மறையூர், மூணாறு பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த சூழலில் எஸ் வளைவுப் பகுதியில் நடுசாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.அதை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகனங்கள் வளைவு பகுதியில் திரும்ப முடியாமல் நிலை தடுமாறி விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.

சீரமைக்க வேண்டும்

அதுமட்டுமின்றி உடுமலை மூணாறு சாலையின் ஓரத்தில் மழை பெய்த போது பள்ளம் போன்ற அமைப்பு ஏற்பட்டது. அதையும் மண் கொட்டி சீரமைப்பதற்கு முன் வரவில்லை. இதனால் வாகனங்கள் விலகிச் செல்ல முடியாமல் நிலை தடுமாறி பழுதடையும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. எனவே உடுமலை மூணாறு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம் போன்ற அமைப்பை மண்ணைக் கொட்டி சீரமைப்பதற்கும் எஸ் வளைவு பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story