கடலூர் மாவட்டத்தில்கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் 435 பேர் பலிபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் 504 பேர் கைது
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நடந்த சாலை விபத்தில் 435 பேர் பலியானார்கள். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் 504 பேர் கைது செய்யப்பட்டனர்.
புத்தாண்டையொட்டி கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில், மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு பணி, கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதன் மூலம் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த 2022-ம் ஆண்டு மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 283 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, திருடப்பட்ட ரூ.1 கோடியே 60 லட்சத்து 12 ஆயிரத்து 358 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
1,32,756 மோட்டார் வாகன வழக்குகள்
மாவட்டத்தில் 36 கொலை வழக்குகளில் 102 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். (கடந்த 2021-ம் ஆண்டு 43 கொலை வழக்கு) 11 கொலை குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டிய 68 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய 4462 பேர் மீதும், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்ற வாகன வழக்குகள் 484 என பல்வேறு மோட்டார் வாகன வழக்குகள் என்று மொத்தம் 1,32,756 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து ஒழுங்கில் கவனம் செலுத்திய விதமாக சாலை மரண விபத்துக்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
435 பேர் பலி
416 சாலை மரண வழக்குகளில் 435 பேர் பலியாகி உள்ளனர். 2021 -ம் ஆண்டு 525 சாலை மரண விபத்தில் 550 பேர் பலியாகி இருந்தனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 21 சதவீதம் இறப்பு குறைந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை, சாராய கடத்தல் போன்ற குற்ற செயலில் ஈடுபட்ட 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். முதியோர் பாதுகாப்பை உறுதி செய்ய அறிமுகப்படுத்த ஹலோ சீனியர் 82200 09557 என்ற காவல் உதவி எண் மூலம் வந்த 306 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றவாளிகள் கைது
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய லேடீஸ் பர்ஸ்ட் 82200 06082 என்ற காவல் உதவி எண் மூலம் வந்த 605 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காணாமல் போன 733 பேரை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். நீதிமன்ற விசாரணை வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 2,795 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,896 பழைய குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போக்சோ குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றம் மூலம் 35 பேருக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கற்பழிப்பு, வரதட்சணை, பெண் கடத்தல் போன்ற குற்ற வழக்குகளில் 504 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் இரவு நேர குற்றங்களை தடுக்க ரோந்து பணி மேற்கொள்ளும் அதிகாரிகளின் பெயர், செல்போன் எண்கள் வாட்ஸ்-அப், முகநூல் இணைய தளத்தின் மூலம் தினந்தோறும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.