கிறிஸ்தவர்கள் சாலை மறியல்


கிறிஸ்தவர்கள் சாலை மறியல்
x

சேந்தமங்கலத்தில் கல்லறைகள் உடைக்கப்பட்டதை கண்டித்து கிறிஸ்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் எஸ்.பி.எம். தேவாலயம் உள்ளது. அதன் பின்னால் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான கல்லறை தோட்டம் அமைந்துள்ளது. அங்கு கடந்த மாதம் கல்லறைகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதை அறிந்த எஸ்.பி.எம். திருச்சபை நிர்வாகத்தினர் சேந்தமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து நேற்று எஸ்.பி.எம். தேவாலயம் முன்பு கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டு வந்து சேந்தமங்கலம்-நாமக்கல் பிரதான சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் அங்கு விரைந்து வந்து மதபோதகர் அருண் பிலிப், நிர்வாகி கமலேஷ், சிறுபான்மை நல உரிமைகள் பிரிவு அமைப்பாளர் சம்பத் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கல்லறைகள் இடித்தது சம்பந்தமாக விசாரித்து வருகிறோம். மேலும் சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து பிரச்சினையை தீர்க்கலாம் என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். கிறிஸ்தவர்களின் திடீர் மறியல் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story