2 இடங்களில் சாலை மறியல்
ஸ்ரீவில்லிபுத்்தூரில் 2 இடங்களில் சாலை மறியல் போராட்டம் மான்ராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்்தூரில் 2 இடங்களில் சாலை மறியல் போராட்டம் மான்ராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
குடிநீர் வினியோகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சித்தாலம்புத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் 2 மாதத்திற்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுவதாகவும், அவ்வாறு வழங்கப்படும் குடிநீர் தரமானதாக இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றியத்திற்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மான்ராஜ் எம்.எல்.ஏ.விற்கு தகவல் தெரிவித்தனர்.
சாலை மறியல்
பின்னர் மான்ராஜ் எம்.எல்.ஏ. அப்பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் மான்ராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போராட்டம்
மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பஸ்கள், ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள், மேலும் விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்திற்குள் வருவது கிடையாது. இரவு மற்றும் பகல் நேரங்களில் எந்த நேரமும் பஸ் நிலையத்திற்கு வராமல் சர்ச் அருகிலேயே பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர்.
இதனை கண்டித்து மான்ராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன், கவுன்சிலர்கள் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையம் அருகே நான்கு முக்கு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் நகர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அனைத்து பஸ்களும் நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவ்வாறு வந்து செல்லாத பஸ் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.
இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.