செஞ்சியில் ராணுவ வீரரை தாக்கியதாக போலீசை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்


செஞ்சியில் ராணுவ வீரரை தாக்கியதாக    போலீசை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
x

செஞ்சியில் ராணுவ வீரரை தாக்கியதாக போலீசை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்


செஞ்சி,

செஞ்சியை அடுத்த நல்லான் பிள்ளை பெற்றால் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கவுரிசங்கர் தலைமையிலான போலீசார் நேற்று முன் தினம் இரவு பாலப்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இரவு 11 மணி அளவில் அங்குள்ள டாஸ்மாக் கடை பின்புறம் கருவாட்சித் தாங்கள் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் மகன் பிரபாகரன் (வயது 32) என்பவரும் புதுப்பாளையம் கிராமம் ராஜமாணிக்கம் மகன் முருகன் (35) ஆகியோா் இருந்துள்ளனர்.

இதில், பிரபாகரன் ராணுவ வீரர் ஆவார். விடுமுறையில் வந்துள்ளார். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு பிடித்து சென்றனர். இந்நிலையில் சந்தேகப்படும்படி நின்றிருந்த அவர்களை விசாரிக்க சென்றபோது தன்னை தாக்கியதாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கவுரிசங்கர் கொடுத்த புகாரின் பேரில் பிரபாகரன், முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு ராணுவ வீரர் பிரபாகரனையும் முருகனையும் போலீசார் தாக்கியதாகவும், போலீசாரை கண்டித்தும் புதுப்பாளையம் கிராம மக்கள் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் செஞ்சி கூட்டு ரோட்டிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.


Next Story