புதிய டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து சாலை மறியல்
குத்தாலம் அருகே புதிய டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து 4 கிராமமக்கள் சாலை மறியல் செய்யப்போவதாக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குத்தாலம்:
குத்தாலம் அருகே புதிய டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து 4 கிராமமக்கள் சாலை மறியல் செய்யப்போவதாக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம், அரையபுரம், தொழுதாலங்குடி, கடலங்குடி உள்ளிட்ட 4 கிராம பிரதிநிதிகள், முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சேத்திரபாலபுரம் காலபைரவர் கோவில் வளாகத்தில் நடந்தது.
இதில் சேத்திரபாலபுரம் காவேரி ஆற்றங்கரையில் புதிய டாஸ்மாக் மதுபான கடை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இங்கு டாஸ்மாக் மதுபான கடை அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி 4 கிராம மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதை தடை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
இந்தநிலையில் கூட்டத்தின் முடிவில் இன்று (திங்கட்கிழமை) மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரிடம் டாஸ்மாக் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளிப்பது, உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் வருகிற 20-ந் தேதி சேத்திரபாலபுரம் கடைவீதியில் 4 கிராம பொதுமக்களை திரட்டி மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் போராட்டத்தில் அனைத்து கிராம மக்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள்,ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.