மந்தாரக்குப்பத்தில்ஆம் ஆத்மி கட்சியினர் சாலை மறியல்
மந்தாரக்குப்பத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மந்தாரக்குப்பம்,
மந்தாரக்குப்பம் கங்கைகொண்டான் பஸ் நிறுத்தம் அருகே ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று காலை பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக அதன் அருகில் கட்சி கொடியேற்ற முடிவு செய்யப்பட்டு, கொடிக்கம்பம் நடப்பட்டது. ஆனால் அங்கு கொடிக்கம்பம் நடுவதற்கு அவர்கள் அனுமதி பெறவில்லை என தெரிகிறது. இதுபற்றி அறிந்த கம்மாபுரம் கிழக்கு வருவாய் அதிகாரி ஆனந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் சக்கரவர்த்தி மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு விரைந்து வந்து, கட்சி கொடிக்கம்பம் நட அனுமதி பெறவில்லை என்று கூறி அந்த கம்பத்தை அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த ஆம்ஆத்மி கட்சியினர், மண்டல தலைவர் தேவகுமார் தலைமையில் கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கங்கைகொண்டான் பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திஆனந்த், கிழக்கு மாவட்ட மகளிர் அணி ஷர்மிளா பர்வீன் மற்றும் நிா்வாகிகள் பலர் கலந்து கொண்டு கொடிக்கம்பத்தை நட அனுமதிக்கக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், மந்தாரக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீங்கள் தாசில்தாரிடம் அனுமதி பெற்று கம்பத்தை நட்டுக்கொள்ளலாம் என தெரிவித்தனர். இதையேற்ற அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதணைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.