திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூரில் பா.ஜனதாவினர் சாலை மறியல்
திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூரில் பா.ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலூர்,
திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூரில் பா.ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமங்கலம்
விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பா.ஜனதா தொண்டர்கள் பாதயாத்திரைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பாதயாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் அனுமதி மீறி பாதயாத்திரையை தொடங்கி வைப்பதற்காக சிவகாசி சிவன் கோவில் பகுதி அருகே திரண்ட பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் மற்றும் தொண்டர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமங்கலத்தில் தேவர் சிலை முன்பு மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சரவணகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் சின்னச்சாமி மற்றும் நிர்வாகிகள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சாலை மறியலை கைவிடக் கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
மேலூர்
மேலூர் பென்னிகுயிக் பஸ் நிலையம் முன்பு போலீசாரை கண்டித்து பா.ஜனதாவினர் திடீரென சாலை மறியல் போராட்டம் செய்ய முயன்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனையடுத்து அங்கு வந்த மேலூர் போலீசார் 2 பெண்கள் உள்பட 30 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டியில் உள்ள தேவர் சிலை அருகில் பாரதீய ஜனதா கட்சி மாவட்ட துணைத்தலைவர் சொக்கநாதன், மாவட்ட பொது செயலாளர் மொக்கராஜ் ஆகியோர் தலைமையில் ஒன்றிய தலைவர்கள் கருப்பையா, சின்னச்சாமி, பாக்கியராஜ், நகரச் செயலாளர் முத்தையா மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த சாலை மறியலால் மதுரை-தேனி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.