இழப்பீடு வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே 2 பேர் மர்மமான முறையில் இறந்தனர். அவர்கள் குடித்த மதுவில் சயனை கலந்து இருந்ததாக கூறிய கலெக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை அருகே 2 பேர் மர்மமான முறையில் இறந்தனர். அவர்கள் குடித்த மதுவில் சயனை கலந்து இருந்ததாக கூறிய கலெக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுகுடித்த 2 பேர் மர்ம சாவு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள தத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் பூராசாமி (வயது 65), பழனிகுருநாதன்(55). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு கழனிவாசல் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து மதுவாங்கிக்கொண்டு தத்தங்குடியில் உள்ள பழனிகுருநாதனுக்கு சொந்தமான இரும்பு பட்டறையில் வைத்து குடித்தனர்.
இதில் மயங்கி விழுந்த இருவரையும் உறவினர்கள் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதித்தபோது இருவரும் இறந்து விட்டது தெரிய வந்தது.
சந்தேக மரணம்
இவர்கள் இருவரும் டாஸ்மாக் மதுபானத்தை குடித்ததால் இறந்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக சந்தேக மரணம் என பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.
உறவினர்கள் சாலைமறியல்
இதனிடையே இருவரும் இறந்து கிடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களை தடய அறிவியல் மருத்துவ நிபுணர் குழு சோதனை செய்துள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுகுடித்ததால் இருவரும் இறக்கவில்லை என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்து இருந்தார்.
இது தவறான தகவல் என்றும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறி தத்தங்குடி பகுதியில் பழனிகுருநாதன் வீட்டின் அருகே உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதை அறிந்த குத்தாலம் தாசில்தார் இந்துமதி, துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். ஆனால் அங்கிருந்து கலைந்து செல்லாமல் கோஷம் எழுப்பி போராட்டத்தை தொடர்ந்தனர். மறியல் காரணமாக மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
400 மதுபாட்டில்கள் பறிமுதல்
இதையடுத்து மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா, போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பிரேத பரிசோதனை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
டாஸ்மாக் மதுபானம் குடித்ததால் 2 பேரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழனிவாசல் டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து இறந்தவர்கள் குடித்த மது வகையை சேர்ந்த 400 மது பாட்டில்களை பெரம்பூர் போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
ஆய்வுக்காக அனுப்பி வைப்பு
இதில் 13 மதுபாட்டில்களை டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் சென்னைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மதுபான கடை மேற்பார்வையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் மதுக்கடைகள் பூட்டப்பட்டன.
பிரேத பரிசோதனைக்கு பிறகு 2 பேரின் உடல்களும் அவர்களுடைய வீடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகளுக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டன.
பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதா முருகன் சார்பில் இறந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
வேறு காரணங்கள்?
இறந்தவர்கள் இருவரும் டாஸ்மாக் மது குடித்ததால் இறந்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.