என்.எல்.சி. சுரங்க பணிக்காக நெற்பயிர்கள் அழிப்பு:3 இடங்களில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 327 பேர் கைது


தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்காக நெற்பயிர்கள் அழிக்கப்பட்டதை கண்டித்து மாவட்டத்தில் 3 இடங்களில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 327 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணி

என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்காகவும், பரவனாறு மாற்றுப்பாதைக்காகவும் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களை அழித்த என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும், நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு புதிய நிலக்கொள்கையின்படி 3 மடங்கு இழப்பீடு, நிரந்தர வேலை, மாற்று இடம், வீட்டு மனைப்பட்டா வழங்கிட வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம் ஆகிய இடங்களில் 8-ந் தேதி (அதாவது நேற்று) சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

கடலூர்

ஆனால் விவசாயிகள் சங்கத்தினரின் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக விவசாயிகள் சங்கத்தினர் நேற்று காலை கடலூர் அண்ணாபாலம் அருகில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் நாகைமாலி எம்.எல்.ஏ. தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் அண்ணா பாலம் அருகில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், துணைத்தலைவர் குமரகுருபரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் பன்னீர், ஒன்றிய தலைவர் வைத்திலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 17 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்து திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர்.

விருத்தாசலம்

இதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ரமேஷ் பாபு, ரவிச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் அசோகன், பாலமுருகன், சீனிவாசன், மேரி, மாதவி, அமிர்தலிங்கம், கலைச்செல்வன், செந்தில் மாரிமுத்து உள்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்து, விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

சேத்தியாத்தோப்பு

பரவனாறு மாற்றுப்பாதையால் நெற்பயிர்களை அழித்த என்.எல்.சி.யை கண்டித்து சேத்தியாத்தோப்பிலும் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. சின்னத்துரை தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சின்னத்துரை எம்.எல்.ஏ. உள்பட 127 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 27 பேர் பெண்கள் ஆவார்கள். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story