பா.ம.க.வினர் சாலை மறியல்
செங்கத்தில் பா.ம.க.வினர் சாலை மறியல்
செங்கம்
செங்கம் அருகே உள்ள கோளாப்பாடி கிராமத்தில் பா.ம.க. சார்பில் கட்சி கொடி கம்பம் நேற்று வைக்கப்பட்டது. இந்த கொடி கம்பத்தை வருவாய்த்துறையினர் அகற்றியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் பா.ம.க. கொடி கம்பத்தை அதே இடத்தில் அமைக்க இன்று கட்சி நிர்வாகிகள் முயற்சித்துள்ளனர். இதையடுத்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் அங்கு வந்து அனுமதியில்லாமல் கொடி கம்பம் அமைக்கக்கூடாது என்றனர்.
இதனால் போலீசாருக்கும் பா.ம.க.வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது மாவட்ட செயலாளர் பாண்டியன் போலீசாரால் கீழே தள்ளிவிடப்பட்டதாகவும், அதில் அவர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பா.ம.க. நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்து பா.ம.க.வினர் செங்கம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிய பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த சாலை மறியலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இதை தொடர்ந்து செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமரன் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.