பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்- கண்டன ஆர்ப்பாட்டம்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்- கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்
கடையநல்லூர்:
இந்தியா முழுவதும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் நேற்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.
இதற்கு கண்டனம் தெரிவித்து நெல்லை மேலப்பாளையம் சந்தை முக்கு ரவுண்டானா பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் ரோட்டில் அமர்ந்து மத்திய அரசையும், தேசிய புலனாய்வு முகமையையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதை அறிந்த மேலப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மேலப்பாளையம் நகர தலைவர் ஷேக் தாவூது உள்பட 30 பேரை கைது செய்தனர்.
நெல்லை அருகே பேட்டையில் ரொட்டிக்கடை பஸ்நிறுத்தம் அருகே பேட்டை பகுதி தலைவர் ஷேக் சுல்தான் தலைமையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 13 பேரை பேட்டை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
பாளையங்கோட்டை - அம்பாசமுத்திரம் சாலையில் பத்தமடை போலீஸ் நிலையம் அருகே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நகரச் செயலாளர் ஷேக் செய்யதலி தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பத்தமடை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் அமீன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தென்மண்டல தலைவர் திப்பு சுல்தான், இமாம் கவுன்சிலர் செயலாளர் சாகுல்ஹமீது உஸ்மானி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர். இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி மதுவிலக்கு துணை சூப்பிரண்டு சுப்பையா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.