சாலை, சாக்கடை கால்வாயை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


சாலை, சாக்கடை கால்வாயை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

சாலை, சாக்கடை கால்வாயை சீரமைக்கக்கோரி, ேசலத்தில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சேலம்

சாலைமறியல்

சேலம் மாநகராட்சி 26-வது வார்டு சின்னேரி வயல்காடு நேதாஜி தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலை, சாக்கடை கால்வாய் வசதிகள் இல்லை. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். அவர்கள் சாலை, சாக்கடை கால்வாய் வசதி கேட்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அந்த பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. அதன்பிறகு அந்த பணி கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலையில் அந்த சாலையை சீரமைக்கக்கோரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சின்னேரி வயல்காடு நேதாஜி தெருவில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

சாலைமறியல் குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலை அமைக்கும் பணியை உடனே தொடங்கி பொங்கல் பண்டிகைக்கு முன்பாக முடித்து விடுவதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story