தமிழ் புலிகள் அமைப்பினர் சாலை மறியல்
ஆலங்குளத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ் புலிகள் அமைப்பினர் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குளம்:
ஆகஸ்டு 20-ந்தேதி சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாள் வருவதையொட்டி ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக சுற்றுச்சுவரில் ஆலங்குளம் தமிழ் புலிகள் கட்சி அமைப்பு சார்பில் சுவர் விளம்பரம் எழுதப்பட்டது. அரசு சுவரில் உரிய அனுமதி பெறாமல் எழுதப்பட்டதாக கூறி, ஆலங்குளம் போலீசார் அதை இரவோடு இரவாக அழித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த தமிழ் புலிகள் கட்சியினர் ஆலங்குளம் பஸ் நிலையம் அருகில் நெல்லை- தென்காசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அதே இடத்தில் மீண்டும் சுவர் விளம்பரம் எழுத வேண்டும் என கோரி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் அங்கு வந்து, அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபடக்கூடாது என கூறினர். தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிடாததால், மறியலில் ஈடுபட்ட 18 பேரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அங்கு சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.