குடிநீர் வழங்காததை கண்டித்து நரிக்குறவர்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்காததை கண்டித்து நரிக்குறவர்கள் சாலை மறியல்
x

ஒடுகத்தூரில் குடிநீர் வழங்காததை கண்டித்து நரிக்குறவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர்

ஒடுகத்தூரில் குடிநீர் வழங்காததை கண்டித்து நரிக்குறவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் வழங்கவில்லை

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் காவிரி கூட்டுக் குடிநீர், அகரம் சேரி பாலாற்றில் இருந்து கொண்டு செல்லும் குடிநீர் மற்றும் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகளில் இருந்தும் குடிநீர் வழங்கி வருகின்றனர். 4-வது வார்டில் 300-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சில நேரங்களில் குடிநீரே வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கும், வார்டு கவுன்சிலருக்கும் மனுவாக கொடுத்துள்ளனர். ஆனாலும் அவர்கள் சீரான குடிநீர் வழங்கவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென இந்தியன் வங்கி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு அந்த வழியாக சென்றார். அவர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உடனடியாக உங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் எனக் கூறியதோடு நாலாவது வார்டு கவுன்சிலர் மற்றும் பேரூராட்சி அதிகாரிகளை அழைத்து உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதற்குள் வேப்பங்குப்பம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்றனர். குடிநீர் வழங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது ‌.


Next Story