நரிக்குறவ மக்கள் சாலை மறியல்
நரிக்குறவ மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்,
மசினகுடி அருகே முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல வனப்பகுதியில் சிறியூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடாந்திர திருவிழா நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. விழாவில் நரிக்குறவ பழங்குடியின மக்கள் கடை அமைத்திருந்தனர். விழா முடிவடைந்து விட்டதால் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், கடைகளை அகற்ற காலதாமதாமகியது. இதை அறிந்த வனத்துறையினர் வனப்பகுதியை விட்டு வெளியேற்ற விரைந்து வந்தனர். அப்போது கடைகளை அகற்றி விட்டு வாகனத்தில் எதிரே நரிக்குறவ மக்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது வனத்துறையினர் வாகனத்தை நிறுத்தி சத்தம் போட்டனர்.
இதனால் இறுதி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் வனத்துறை ஊழியர்கள், பெண்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டவர்களை அடித்து காயப்படுத்தியதாக நரிக்குற மக்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து வாழைத்தோட்டம் வனத்துறை சோதனைச்சாவடியை முற்றுகையிட்டனர். பின்னர் தீர்வு கிடைக்கும் வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித் உத்தரவின் பேரில் ஊட்டி தாசில்தார் ராஜசேகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.