புதிய டிரான்ஸ்பார்மர் மூலம் மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி சாலை மறியல்
மணல்மேடு அருகே புதிய டிரான்ஸ்பார்மர் மூலம் மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணல்மேடு:
மணல்மேடு அருகே புதிய டிரான்ஸ்பார்மர் மூலம் மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் அவதி
மணல்மேடு அருகே வில்லியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட உச்சிதமங்கலம் கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 1 ஆண்டுக்கு மேலாக குறைந்த மின் அழுத்தம் காரணமாக இப்பகுதியில் வீடுகளில் உள்ள மின்விசிறி, கிரைண்டர், மிக்சி போன்ற வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
புதிய டிரான்ஸ்பார்மர்
இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உச்சிதமங்கலம் கிராமத்தில் 63 கிலோவாட்டில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. ஆனால் புதிய டிரான்ஸ்பார்மரை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்காத காரணத்தினால் உச்சிதமங்கலம் வார்டு உறுப்பினர் சுபாஷ் தலைமையில் பொதுமக்கள் உச்சிதமங்கலம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக புதிய டிரான்ஸ்பார்மர் மூலம் மின் இணைப்பு வழங்க கோரியும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்வாரியத்தை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மணல்மேடு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக புதிய டிரான்ஸ்பார்மர் மூலம் மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.
மேலும் மின்மாற்றியை பயன்பாட்டுக்கு கொண்டுவர மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக பணியை தொடங்கியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.