பறிமுதல் செய்யப்பட்ட முத்தரையர் சிலையை திரும்ப வழங்ககோரி சாலைமறியல்
குளித்தலை சுங்ககேட் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட முத்தரையர் சிலையை திரும்ப வழங்ககோரி சாலைமறியலில் ஈடுபட்ட 67 பேர் கைது செய்யப்பட்டனர்.
முத்தரையர் சிலை பறிமுதல்
கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கதுரை என்பவர் தனது பாட்டிக்கு சொந்தமான நிலத்தில் முத்தரையர் சிலை வைத்து திறப்பு விழா நடத்துவதாக அழைப்பிதழ் அச்சடித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் அனுமதியின்றி வைக்கப்பட்ட முத்தரையர் சிலை மற்றும் சிங்கம் சிலையை பறிமுதல் செய்திருந்தனர்.இந்தநிலையில் கடந்த மாதம் குளித்தலை சுங்ககேட் பகுதிக்கு வந்த முத்தரையர் வாழ்வாதார சங்கத்தினர் சிலர் முத்தரையர் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
சாலைமறியல்
இதையடுத்து அச்சங்கத்தினர் சிலையை தங்களிடம் வழங்குமாறு குளித்தலை கோட்டாட்சியருக்கு மனு அளித்துள்ளனர். ஆனால் சிலை வழங்கப்படாத கண்டித்து நேற்று கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவதாக தபால் மூலம் வருவாய் துறை மற்றும் போலீசாருக்கு அவர்கள் கடிதம் அனுப்பி இருந்தனராம். இந்த முற்றுகை போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.இந்த நிலையில் நேற்று குளித்தலை சுங்ககேட் பகுதியில் இச்சங்கத்தினர் ஒன்று கூடி முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அப்போது அங்கு சென்ற போலீசார் அவர்களை தடுத்தனர். இதையடுத்து அவர்கள் சுங்ககேட் பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 67 பேரை போலீசார் கைது செய்து பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர்.