சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சாலை மறியல்
சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி 3-ந் தேதி சாலை மறியல் செய்வதென ஊராட்சி தலைவர்கள் முடிவு செய்தனர்.
தொண்டி,
திருவாடானை யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சி தலைவர்கள் முத்துராமலிங்கம், பரக்கத் அலி, நிரோஷா கோகுல், மோகன்ராஜ் ஆகியோர் கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருவாடானை யூனியன் கட்டிவயல், வெள்ளையபுரம், ஓரியூர், பனஞ்சாயல் ஊராட்சிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மங்கலக்குடி நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் வினியோகம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 மாதமாக குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. தொடர்ந்து எங்கள் ஊராட்சி கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என அதிகாரிகளை பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால் குடிநீர் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. மங்கலகுடி நீரேற்று நிலையத்தில் மோட்டார் பழுதடைந்து விட்டதாலும், பழுது நீக்கி குடிநீர் வினியோகம் செய்வதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாலும் எங்கள் பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் காலி குடங்களுடன் தண்ணீரை தேடி அலையும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிராம மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கிட ஊராட்சி தலைவர்கள் ஆகிய நாங்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பலனளிக்காத நிலையில் கிராம மக்களை ஒன்று திரட்டி வருகிற 3-ந் தேதி கட்டிவயல் நான்கு முக்கு ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.