சாராய விற்பனையை கண்டித்து கொட்டும் மழையில் சாலை மறியல்


சாராய விற்பனையை கண்டித்து கொட்டும் மழையில் சாலை மறியல்
x

குடியாத்தம் அருகே சாராய விற்பனையை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர்

குடியாத்தம் அருகே சாராய விற்பனையை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாராயம் விற்பனை

குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் சாராய வியாபாரம் தொடர்ந்து நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி சாராயம் விற்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சி லிங்குன்றம் கிராமத்தில் காலை முதலே சாராயம் விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் லிங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் காலையில் சாராயம் குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு சென்றுள்ளனர். போதையில் வீட்டுக்கு வந்த இளைஞர்களை அவரது தாயார் தட்டி கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் தாயாரை தாக்கியுள்ளனர். இதனால் அந்த பெண் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாலை வரை வீட்டிற்கு வரவில்லை.

சாலை மறியல்

இதனால் சாராயம் விற்பவரிடம் அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஏன் சாராயம் விற்பனை செய்கிறாய், இதனால் ஊரில் பிரச்சினை வருகிறது என கேட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு சாராயம் விற்பவர், ஒரு பெண்ணை சரமாரியாக தாக்கி உள்ளார். போலீசுக்கு மாமூல் கொடுத்து விட்டு தான் சாராய வியாபாரம் செய்வதாகவும், எங்கு போய் புகார் செய்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த லிங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாலையில் குடியாத்தம்- பேரணாம்பட்டு ரோட்டில் லிங்குன்றம் பஸ் நிறுத்தம் அருகே கொட்டும் மழையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி சென்று மறியலில் ஈடுபட்டவரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிராம மக்கள் பலமுறை புகார் அளித்தும் சாராய வியாபாரிகளை போலீசார் கைது செய்யவில்லை, அதனால் இந்த கிராமத்தில் பிரச்சினைகள் உருவாகிறது என கூறினர். அதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

வியாபாரி கைது

தொடர்ந்து குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் லிங்குன்றம் கிராமத்தில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த சம்பத் (வயது 60) என்பவரை கைது செய்தனர்.

சாராய வியாபாரத்தை தடுக்கக் கோரி கொட்டும் மழையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story