சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்கக்கோரி சாலை மறியல்
கட்டிமேடு, ஆதிரங்கம், சேகல் ஊராட்சிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்கக்கோரி நடந்த சாலை மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
கட்டிமேடு, ஆதிரங்கம், சேகல் ஊராட்சிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்கக்கோரி நடந்த சாலை மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுற்றித்திரியும் பன்றிகள்
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு, ஆதிரங்கம், சேகல் ஆகிய ஊராட்சிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி பொதுமக்களுக்கு சுகாதார கேடுகளை ஏற்படுத்தும் வகையிலும், விவசாய நிலங்களையும் நாசப்படுத்தும் வகையிலும் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன.
பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என 3 ஊராட்சிகள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு மனுக்கள் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
சாலை மறியல்
பன்றிகளை பிடிக்காததால் பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் சுகாதார கேடுகள் ஏற்படுவதாகவும், நெற்பயிர்களை நாசப்படுத்தப்படுவதாகவும் கூறி கட்டிமேடு ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன், ஆதிரங்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன், சேகல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி, ஆகியோர் தலைமையில் கட்டிமேடு பள்ளிவாசல் அருகில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இதில் த.மு.மு.க. ஒன்றிய செயலாளர் ஜியாவுதீன், பொறுப்பாளர் ராவுத்தர்அப்பா, மா.ஜ.க மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஹ்மத்துல்லா, கட்டிமேடு, ஆதிரங்கம் வர்த்தக சங்க செயலாளர் குமரன், விவசாய சங்க தலைவர் பக்கிரிசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், பொறியாளர் சூரியமூர்த்தி, தாசில்தார் மலர்கொடி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.