கொண்டையங்குப்பத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக்கோரி சாலை மறியல்


கொண்டையங்குப்பத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக்கோரி சாலை மறியல்
x

கொண்டையங்குப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

வந்தவாசி

கொண்டையங்குப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிைய அடுத்த கொண்டையங்குப்பம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கொண்டையங்குப்பம் கிராமம் நல்லூர் கிராமத்தோடு இணைந்து செயல்பட்டு வருகிறது. கொண்டையங்குப்பம் கிராமத்தை நல்லூர் கிராமத்தில் இருந்து பிரித்து தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்ைக விடுத்து வருகிறார்கள்.

பலமுறை மாவட்ட கலெக்டருக்கும், வந்தவாசி தாசில்தாருக்கும் புகார் மனு அளித்தும் மேலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த 300-க்கும் மேற்பட்ட கொண்டையங்குப்பம் கிராம மக்கள் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் உள்ள திரேசாபுரம் கிராமம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த வழியாக வந்த வாகனங்களை வேறு பாதைக்கு மாற்றிய போது சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சு.காட்டேரி என்ற கிராமம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து தகவல் அறிந்த செய்யாறு சப்-கலெக்டர் வினோத்குமார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story