குளச்சல் பகுதியில் கடல் சீற்றத்தால் சாலை துண்டிப்பு
குளச்சல் பகுதியில் கடல் சீற்றத்தால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதோடு துறைமுக பாலமும் சேதமடைந்துள்ளது. மணலரிப்பால் வீடுகள் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
குளச்சல்,
குளச்சல் பகுதியில் கடல் சீற்றத்தால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதோடு துறைமுக பாலமும் சேதமடைந்துள்ளது. மணலரிப்பால் வீடுகள் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
கடல் சீற்றம்
குமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடல் சீற்றமாக இருந்து வருகிறது. இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு அழிக்காலில் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததில் அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சுமார் 75 வீடுகளில் வசித்த மீனவ குடும்பத்தினர் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதேபோல் மிடாலம் உள்ளிட்ட மீனவ கிராமங்களும் பாதிக்கப்பட்டன. தொடரும் சீற்றத்தால் மாவட்டத்தில் பெரும்பாலான நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் குளச்சல், கொட்டில்பாடு, சைமன்காலனி, வாணியக்குடி, கோடிமுனை, குறும்பனை உள்ளிட்ட கடல் பகுதியில் அலையின் சீற்றம் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. இதில் கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடலரிப்பு ஏற்பட்டது. இந்த கடல் அரிப்பில் சுமார் 30 அடி ஆழத்திற்கு குடியிருப்பு பகுதி அருகே திடீரென பள்ளம் உருவாகி வீடுகள் இடியும் அபாயம் ஏற்பட்டது.
சாலை துண்டிப்பு
பள்ளம் விழுந்த பகுதியில் சாலையும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையில் அமைக்கப்பட்டிருந்த 2 சோலார் கம்பம் கடலில் விழுந்து சேதமடைந்தது. மீனவர் ஓய்வு அறை கட்டிடத்தை சுற்றி மணலரிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த கட்டிடமும் விழுந்து விடுமோ என்ற நிலை காணப்படுகிறது.
எனவே இதுபோன்ற பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மேற்கு கடலரிப்பு தடுப்பு சுவரின் நீளத்தை நீட்டித்து கொட்டில்பாடு கிராமத்தை பாதுகாக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடல் பாலம் சேதம்
குளச்சல் கடலுக்குள் அமைந்துள்ள துறைமுக பாலத்தின் கடைசி பகுதி பல வருடங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இது குளச்சலின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறது.
பழமையான இந்த பாலத்தின் உடைந்து விழுந்த பகுதியில் 10 தூண்கள் தெரியும் அளவில் நின்றது. இந்தநிலையில் தற்போது கடல் சீற்றத்தினால் பாலம் மேலும் பாதிப்பை சந்தித்தது. அதாவது தனியாக நின்ற தூண்கள் கடலுக்குள் சரிந்து விழுந்து சேதமடைந்தது. தற்போது அந்த பாலத்தில் 5 தூண்கள் மட்டும் தனியாக தெரிகிறது. அதுவும் கடல் சீற்றத்தினால் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தொடரும் சீற்றத்தால் குளச்சல் கடல் பகுதியில் பல இடங்களில் ஆங்காங்கே மணலரிப்பு ஏற்பட்டு பள்ளமாக காட்சி அளிக்கிறது.