காவேரிப்பட்டணத்தில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா?-மாணவ-மாணவிகள் எதிர்பார்ப்பு


காவேரிப்பட்டணத்தில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா?-மாணவ-மாணவிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணத்தில் பழுதடைந்த சாலைகளால் மாணவ, மாணவிகள் அவதிப்படுகிறார்கள். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பழுதடைந்த சாலைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், காவல் நிலையம், சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள், குடிசை தொழில்கள் நிறைந்த பகுதிகளாக உள்ளன. மேலும் பல்வேறு நிறுவனங்களும், குடிசை தொழில்களும் நிறைந்த பகுதியாக காவேரிப்பட்டணம் உள்ளது. பேரூராட்சி அந்தஸ்தில் உள்ள காவேரிப்பட்டணத்திற்கு நாள்தோறும் தொழில் நிமித்தமாகவும், பல்வேறு பணிகளுக்காகவும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

காவேரிப்பட்டணத்தில் இருந்து சுற்றி உள்ள கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. குறிப்பாக காவேரிப்பட்டணம் அண்ணா நகர், ஸ்ரீராமுலு நகர், பொன்னன் நகர், வி.எஸ்.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் பல்லாங்குழியாக காட்சி அளிக்கிறது.

சீரமைக்கப்படுமா?

இந்த பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் பயன்படுத்தி வரும் தார் சாலைகள் மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் இந்த சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் செல்ல மிகவும் சிரமமாக உள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பழுதடைந்த சாலையில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும், வாகனங்களும் அடிக்கடி பழுதாகி விடுவதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் கூறினார்கள். தாரையே பார்க்காத சாலையாக அந்த பகுதி தார் சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் சீரமைக்கப்படுமா, அந்த பகுதியில் புதிய சாலைகள் போடப்படுமா என்று மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

பல்லாங்குழி சாலைகளால் அவதிப்படும் மாணவிகள்

சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் சாலைகளால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

சத்தியமூர்த்தி, காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் பொன்னன்நகர் செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து, பல்லாங்குழி சாலையாக மாறி பல ஆண்டுகள் ஆகிறது. இந்த பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு படிக்கும் மாணவிகளை பெற்றோர் இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் போதும், மாணவிகள் சைக்கிளில் செல்லும் போதும் குண்டும், குழியுமான சாலையில் தவறி விழுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பாலமுருகன், காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் ஒரு சில சாலைகளை தவிர பெரும்பாலான சாலைகள் பழுதடைந்து காணப்படுகின்றன. சாலைகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் அவை சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. அவற்றில் இரவு நேரத்தில் விபத்துகள் நடப்பது தொடர்கதையாக உள்ளது. இதில் பெரும்பாலும் முதியோரே காயமடைந்து வருகின்றனர். எனவே புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story