தொப்பையாறு அணை அருகே மண் அரிப்பால் சேதம் அடைந்த சாலை; கலெக்டர் சாந்தி ஆய்வு-தரமாக சீரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
தொப்பையாறு அணையின் கரை அருகே மண் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்த சாலையை கலெக்டர் சாந்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலையை தரமாக சீரமைத்து விரைவாக மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
சாலை சேதம்
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் ஊராட்சிக்குட்பட்ட தொப்பையாறு அணையின் கரையோர பகுதி அருகே தொப்பூர்-பொம்மிடி சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக பல்வேறு ஊர்களுக்கு தினமும் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், கல்லூரி வாகனங்கள் சென்று வருவது வழக்கம்.
இதேபோல் தினமும் ஏராளமான பொதுமக்கள், மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் போன்ற வாகனங்களில் இந்த சாலை வழியாக சென்று வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சாலை பகுதியில் சில இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சரிந்து விழுந்து சேதம் அடைந்தது.
கலெக்டர் நேரில் ஆய்வு
இதனால் இந்த சாலை வழியாக பஸ்கள், லாரிகள், பள்ளி கல்லூரி வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்றுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலை சேதம் அடைந்த பகுதியை கலெக்டர் சாந்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
சாலையில் இரு புறங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலை மேலும் சரிந்து விடும் சூழல் ஏற்பட்டிருப்பது அப்போது தெரிய வந்தது. இதனால் தொப்பூர்-பொம்மிடி சாலையில் போக்குவரத்தை முழுமையாக தடை செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தரமாக சீரமைக்க வேண்டும்
சாலை சேதம் அடைந்த பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் மண் கொட்டி எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மண் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்த சாலையை சீரமைக்கும் பணியை தரமாக மேற்கொள்ள வேண்டும். சாலையை விரைவாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலை துறை தர்மபுரி கோட்ட பொறியாளர் ராஜதுரை, நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷகிலா, கவுரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.