ஆனைப்பள்ளம் கிராமத்துக்கு ரூ.6 கோடியில் சாலை வசதி
அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஆனைப்பள்ளம் கிராமத்துக்கு ரூ.6 கோடியில் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
குன்னூர்
அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஆனைப்பள்ளம் கிராமத்துக்கு ரூ.6 கோடியில் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பழங்குடியின கிராமம்
குன்னூர் அருகே பில்லூர் மட்டம் பகுதியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் ஆனைப்பள்ளம், சின்னாலக்கோம்பை, மல்லிக்கொரை ஆகிய பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பழங்குடி மக்களான இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இயற்கை எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த வனப்பகுதியில் வாழும் இந்த பழங்குடியின மக்கள் வனப்பகுதியில் கிடைக்கும் தேன், குருமிளகு, பலா, கிழங்கு உள்ளிட்டவற்றை விற்பனை செய்து தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இங்கு வாழும் மக்களின் வாழ்நாள் கனவாக சாலை வசதி வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
ரூ.6 கோடி மதிப்பு
தங்களது அன்றாட தேவைக்காக அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று வந்தனர். கர்பிணிகள் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் அவர்களை தொட்டில் கட்டி தூக்கி வரும் நிலை இருந்தது. இதனை தொடர்ந்து இந்த பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்ட அப்போதைய மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பில்லூர் மட்டம் முதல் சின்னாலக்கொம்பை பழங்குடியின கிராமம் வரை ரூ.6 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்க உத்தரவிட்டார்.
மகிழ்ச்சி
பின்னர் உலிக்கல் பேரூராட்சி மூலம் சாலை அமைக்கும் பனி தொடங்கப்பட்டது. தற்போது இந்த சாலை அமைக்கும் பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இதனால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், பல ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாததால் குழந்தைகளின் கல்வி, மருத்துவம், அன்றாட தேவைக்காக பரிதவித்து கிடந்தோம். தற்போது சாலை அமைத்து வருவது எங்களது தேவையை பூர்த்தி செய்யும். மேலும் ஆனைப்பள்ளத்தில் இருந்து சின்னாலகோம்பை வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றனர்.