சிதிலம் அடைந்து காணப்படும் சாலை
கொள்ளிடம் அருகே சாலை சிதிலம் அடைந்து காணப்படுகிறது. அந்த சாலையை பயன்படுத்தி வரும் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மெயின் ரோட்டில் இருந்து ஓதவந்தான்குடி கிராமத்துக்கு செல்ல சிமெண்டு சாலை உள்ளது. 800 மீட்டர் தூரம் கொண்ட இந்த சிமெண்டு சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு மேம்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்த சாலையை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராமமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். சிமெண்டு சாலை பல இடங்களில் உடைந்து சிதிலம் அடைந்து காணப்படுகிறது.
மாணவர்கள் காயம்
இதனால் ஓதவந்தான்குடி கிராமத்துக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் தினமும் அவதிப்பட்டு வருகிறார்கள். மாணவர்கள் சைக்கிளில் செல்லும்போது சாலையில் சிதறி கிடக்கும் கற்களால் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராமமக்கள் கூறுகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் கூறுகையில், 'ஓதவந்தான்குடி சிமெண்டு சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.
Related Tags :
Next Story