பொதுமக்கள் சாலைமறியல்
திருப்பூர் 25-வது வார்டில் வீடுகளுக்குள் சாக்கடை கழிவுநீர் செல்வதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்
திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டுக்குட்பட்ட சோளிபாளையம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆனால் அந்த பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறும் வகையில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை.
இதனால் தினமும் மாநகராட்சி லாரி மூலமாக உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இந்த நிலையில் அடிக்கடி கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாக கூறப்படுகிறது. மேலும் குழாயில் வரும் குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
சாலை மறியல்
இதேபோல் அந்த பகுதியில் உள்ள ரேசன் கடை கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கவுன்சிலர் தங்கராஜ் தலைமையில் நேற்று சோளிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.