கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலைமறியல்
பல்லடம் அருகே, கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த 46 பேரை போலீசார் கைது செய்தனர்.
12-வது நாளாக உண்ணாவிரதம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் செயல்படும் கல்குவாரி நிர்வாகத்தை கண்டித்து செந்தில்குமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் தொடர்ந்து 12-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் பல்லடம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தாரிடம் பேச்சுவார்த்தைக்காக வந்தவர்கள், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அங்கேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
46 பேர் ைகது
இதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணிவரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா தலைமையிலான போலீசார் அவர்களிடம், அரசு அலுவலகத்தில் போராட்டம் நடத்தக்கூடாது என எச்சரித்தனர்.
இதையடுத்து தாலுகா அலுவலகத்தின் வெளியே சுற்றுச்சுவர் அருகே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாலை வரை எந்த தீர்வும் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் பல்லடம் நான்குரோடு சந்திப்பில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 15 பெண்கள் உள்பட 46 பேரை பல்லடம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வக்கீல் ஈசனுடன் கலந்து பேசி இன்னும் 1 வாரத்தில் எங்களுக்கு நல்ல முடிவாக அறிவிக்க வேண்டும் அதுவரை போராட்டங்களை ஒத்தி வைக்கிறோம் என அறிவித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதேபோல கோடங்கிபாளையத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் செந்தில்குமாரிடம் போராட்டத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்வதாக போராட்டக்காரர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.