இரவுப்பணியில் டாக்டர் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்
மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரியில் இரவுப் பணியில் டாக்டர்கள் யாரும் பணியில் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் தற்போது தாலுகா அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.இது 1950-ம் பஞ்சாயத்து யூனியன் மருந்தகமாக தொடங்கப்பட்டு, 1962-ம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டு, 2015-ம் ஆண்டு தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 2018-ம் ஆண்டு 57 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இரவு பகலாக வாகனப் போக்குவரத்து நிறைந்த தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ஆஸ்பத்திரியில் விபத்துக்கால சிகிச்சை உள்ளிட்ட அவசர சிகிச்சை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரவுப் பணியில் டாக்டர்கள் இல்லாததால் நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் இணைந்து தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.உடனடியாக விரைந்து வந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.இதனால் 10 நிமிடத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அவசர சிகிச்சை
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:- மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரியில் 6 டாக்டர்கள் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற வேண்டும்.ஆனால் பெரும்பாலான நாட்களில் இரவு நேரங்களில் டாக்டர்கள் யாரும் பணியில் இருப்பதில்லை. திடீர் பாதிப்புகளால் இரவு நேரத்தில் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு செவிலியர்களே டாக்டர்களாக மாறி மருந்துகள் கொடுக்கின்றனர். அல்லது உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். தற்போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு வந்த நபருக்கு டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாமல் உடுமலை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு ஒருசில நிமிடங்கள் தாமதமும் உயிரிழப்பை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது. எனவே மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியிலிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.மேலும் அவசர கால சிகிச்சை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.