பயணிகள் சாலை மறியல்
திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையத்தில் இருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல போதியபஸ் இயக்கப்படாததால் திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பஸ் போக்குவரத்து
திருப்பூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. நள்ளிரவு நேரங்களில் பயணிகள் மிக குறைந்த அளவே இருப்பதால் பஸ்கள் இயக்குவது நிறுத்தப்படுகிறது. வார நாட்களில் கூட்டம் இல்லாத நிலையில் வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் முயல்வதால் அனைத்து பேருந்துகளும் நிரம்பியே செல்கிறது. இந்நிலையில் நேற்று முந்தினம் திங்கட்கிழமை என்பதால் சொந்த ஊருக்கு செல்ல ஏராளமானோர் திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் பயணிகள் வந்தால் சிறப்பு பஸ்கள் இயக்கி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் குண்டம் திருவிழா நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். திருப்பூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை கோவிலுக்கு சிறப்பு பஸ்களாக போக்குவரத்து அதிகாரிகள் மாற்றி அனுப்பி வைத்துள்ளனர்.
மறியல்
இதனால் பஸ் பற்றாக்குறை ஏற்பட்டு கோவில் வழி பஸ் நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் இல்லாமல் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பயணிகள் நேற்று அதிகாலைு 2 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நல்லூர் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.