சாக்கலூத்துமெட்டுவில் வனத்துறையினரின் முட்டுக்கட்டையால் முடங்கி போன மலைப்பாதை திட்டம்


சாக்கலூத்துமெட்டுவில் வனத்துறையினரின் முட்டுக்கட்டையால் முடங்கி போன மலைப்பாதை திட்டம்
x

வனத்துறையினரின் முட்டுக்கட்டையால் சாக்கலூத்துமெட்டு மலைப்பாதை திட்டம் முடங்கி போனது.

தேனி

மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தை தன்னகத்தே கொண்டது தேனி மாவட்டம். தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை.

3 மலைப்பாதைகள்

அண்டை மாநிலமான கேரளாவை தேனி மாவட்டத்துடன் இணைக்கும் வகையில் போடிமெட்டு, குமுளி, கம்பம்மெட்டு ஆகிய 3 மலைப்பாதைகள் உள்ளன. இந்த 3 பாதைகளின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளா, தமிழகத்திற்கு வந்து செல்கின்றன. குறிப்பாக இந்த மலைப்பாதைகளில் லாரிகள், சுற்றுலா வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

மேலும் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான ஏலக்காய், தேயிலை தோட்டங்கள் தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அதிக அளவில் உள்ளன. இதனால் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், தொழிலாளர்கள் தேயிலை, ஏலக்காய் தோட்ட வேலைகளுக்கு தினமும் ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். இதன்காரணமாக 3 மலைப்பாதைகளும் எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும்.

பண்டிகை காலங்களிலும், விசேஷ நாட்களிலும் 3 மலைப்பாதைகளிலும் வாகனங்கள் அதிக அளவில் ெசன்று வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் அடிக்கடி சிக்கி தவிக்கின்றன.

சாக்கலூத்து மெட்டு

இந்தநிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டம் முக்கிய நகரமாக திகழ்கிறது. இந்த நகரத்திற்கு செல்ல வேண்டுமென்றால் கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு வழியாக சுமார் 65 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். இதேபோல் போடிமெட்டு வழியாக 60 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும்.

ஆனால் தேனி மாவட்டம் தேவாரத்தில் இருந்து தமிழக-கேரள எல்லையான சாக்குலூத்துமெட்டு என்ற பகுதி வழியாக வெறும் 20 கிலோ மீட்டர் தூரத்தில் நெடுங்கண்டத்துக்கு விரைந்து செல்ல முடியும். எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளி ஆகிய 3 மலைப்பாதைகளுக்கு அடுத்தப்படியாக சாக்குலூத்து மெட்டு வழியாக கேரளாவுக்கு 4-வது மலைப்பாதை அமைக்க வேண்டும் என்பது தேனி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கை ஆகும்.

முடங்கி போன திட்டம்

இதைக்கருத்தில் கொண்டு 1981-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் சாக்குலூத்து மெட்டு வழியாக, நெடுங்கண்டம் செல்லும் வகையில் மலைப்பாதை அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி தேவாரம் மீனாட்சிபுரத்தில் இருந்து சாக்கலூத்து மெட்டு அடிவாரம் வரை 6 கிலோமீட்டர் தூரத்துக்கு தார்சாலை அமைக்கப்பட்டது. அதன்பிறகு அடர்ந்த வனப்பகுதி என்று கூறி, 4.5 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் சாக்கலூத்து மெட்டு மலைப்பாதை திட்டம் முடங்கி விட்டது.

விவசாயிகள் வேதனை

கடந்த 41 ஆண்டுகளாக இந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருப்பதால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். வனத்துறையினரிடம் அனுமதி பெறுவதற்கான முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை என்பது வேதனையின் உச்சம்.

பாதியிலேயே நிறுத்தப்பட்ட சாக்கலூத்து மலைப்பாதையை அமைக்க வேண்டும் என்று தேவாரம் பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறு சாலை அமைக்கப்பட்டால் தேவாரம், தே.மீனாட்சிபுரத்தில் இருந்து நெடுங்கண்டத்துக்கு எளிதாக செல்லமுடியும். இதுமட்டுமின்றி கேரளாவின் தூக்குப்பாலம், உடும்பன்சோலை உள்ளிட்ட பகுதிகளும் இணைந்துவிடும். இந்த திட்டத்துக்கு குரல் கொடுத்து வரும் பொதுமக்கள் சிலர் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

கரடு, முரடான பாதை

சோனைமுத்து (தேவாரம் நகர்நல குழு ஒருங்கிணைப்பாளர்):- சாக்குலூத்து மெட்டு மலைப்பாதை அமைய உள்ள 4.5 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதாக கூறி வனத்துறையினர் சாலை அமைக்க அனுமதி தராமல் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். இந்த திட்டத்தை நிறைவேற்றிட வலியுறுத்தி தேவாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த சாலை அமைக்கப்பட்டால் மிக எளிதாக கேரளாவுக்கு செல்ல முடியும். குறிப்பாக தினமும் 70 கிலோ மீட்டர் சுற்றி கேரளாவுக்கு வேலைக்கு செல்லக்கூடிய ஏலக்காய் தோட்ட தொழிலாளர்கள், சாக்குலூத்து மெட்டு வழியாக ½ மணி நேரத்தில் கேரளாவுக்கு செல்ல முடியும். எனவே இந்த மலைப்பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

குரு.பவுன்ராஜ் (அரிமா சங்க தலைவர், தேவாரம்):- சாக்கலூத்துமெட்டுவை ஒட்டிய கேரள மாநில பகுதியில் ஏராளமான தோட்ட தொழிலாளர் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை தேவாரத்தில் உள்ளது. இவர்கள் ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தேவாரம் வர வேண்டும். ஆனால் இவர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நடைபாதையை வனத்துறையினர் பராமரிக்காததால் புதர்மண்டி காணப்படுகிறது. கரடுமுரடாக காட்சி அளிக்கும் இந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சாக்கலூத்து மெட்டு மலைப்பாதை பணிக்கு வனத்துறை முட்டுக்கட்டை போட்டுள்ளதால், பலர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு கேரளாவில் குடியேறி விட்டனர். சாக்கலூத்து மெட்டு மலைப்பாதை அமைந்தால் மட்டுமே அவர்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.

நூற்றாண்டு கால ஏக்கம்

தாமஸ் (விவசாய சங்க தலைவர், செட்டிகுளம்):- கேரளாவை இணைக்கக்கூடிய சாக்கலூத்து மெட்டு மலைப்பாதை திட்டத்தால் தமிழர்கள் மட்டுமின்றி, கேரளா மக்களும் எளிதாக வந்து செல்வார்கள். இதன்மூலம் பொருளதாரத்தில் மிகவும் பின்தங்கிய தேவாரம் வளமான பூமியாக மாறும். இதற்காகவே பல போராட்டங்களை இப்பகுதி மக்கள் நடத்தினார்கள். தேவாரம் பகுதி மக்களின் நூற்றாண்டு கால ஏக்கமான இந்த திட்டம் எப்போது நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகுமார் (விளையாட்டு கழக செயலாளர், தேவாரம்):- கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் தினமும் பணி நிமித்தமாக கேரளாவில் உள்ள ஏலக்காய், தேயிலை தோட்டங்களுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் போடி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி செல்வதால் நேரமும், பணமும் விரயம் ஆகிறது. தேவாரம் சாக்குலூத்து மெட்டு மலைப்பாதை திட்டம் நிறைவேறும்பட்சத்தில் தேவாரம் வழியாக கேரள மாநிலம் நெடுங்கண்டத்துக்கு ½ மணி நேரத்தில் சென்றடைய முடியும். இதனால் தொழிலாளர்களுக்கு பணமும், நேரமும் மிச்சமாகும். எனவே தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதியில் நிறுத்தப்பட்ட மலைப்பாதை திட்டம் மீண்டும் தொடங்குமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று காத்திருக்கின்றனர் பொதுமக்கள்.


Related Tags :
Next Story