தர்மபுரி அருகே நிறுத்தப்பட்ட டவுன் பஸ்களை மீண்டும் இயக்கக்கோரி 7 கிராம மக்கள் சாலை மறியல்


தர்மபுரி அருகே நிறுத்தப்பட்ட டவுன் பஸ்களை மீண்டும் இயக்கக்கோரி 7 கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுாி அருகே நிறுத்தப்பட்ட டவுன் பஸ்களை மீண்டும் இயக்க வலியுறுத்தி 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டவுன் பஸ்கள் நிறுத்தம்

தர்மபுாி பஸ் நிலையத்திலிருந்து ஏ.கொல்லப்பட்டி, புதூா், த.குளியனூா், ப.குளியனூா், பருத்திநத்தம் உள்ளிட்ட 7 கிராமங்கள் வழியாக முக்கல்நாயக்கன்பட்டி வரை ஏராளமான டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் அந்த கிராமங்கள் வழியாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் சாலை அமைக்கும் பணி நடைபெற்றதால் அந்த டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

இந்த பணிகள் முடிவுற்ற நிலையில் நிறுத்தப்பட்ட டவுன் பஸ்களை மீண்டும் இயக்க வலியுறுத்தி பலமுறை மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் கோரிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அந்த பகுதி கிராம மக்கள் நிறுத்தப்பட்ட டவுன் பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கண்டன போஸ்டர்களை பல்வேறு இடங்களில் ஒட்டினர்.

சாலை மறியல்

மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 7 கிராமங்களை சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆலிவாயன்கொட்டாய் குட்டகரை பகுதியில் நேற்று காலை அந்த வழியாக வந்த டவுன் பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுபற்றி தகவல் அறிந்ததும் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு ஆதரவாக மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிராமப்புறங்களில் இருந்து நகருக்கு செல்லும் ஏராளமான பொதுமக்கள் இந்த மறியல் போராட்டத்தால் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மயக்கம் அடைந்த நிலையில் உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இது பற்றி தகவல் அறிந்த வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ.வும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் எம்.எல்.ஏக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் வெள்ளிக்கிழமை முதல் டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, 2 மணி நேர சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story