பொக்காபுரத்தில் சாலையை சீரமைக்கும் பணி
மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பொக்காபுரத்தில் சாலையை சீரமைக்கும் பணி நடந்தது. இதற்கு வனத்துறையினர் தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்
மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பொக்காபுரத்தில் சாலையை சீரமைக்கும் பணி நடந்தது. இதற்கு வனத்துறையினர் தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாரியம்மன் கோவில் திருவிழா
நீலகிரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் வருடாந்திர தேர்த்திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்க நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வர உள்ளனர்.
ஆண்டுதோறும் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, மசினகுடியில் இருந்து பொக்காபுரம் செல்லும் சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்லும் வகையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்படும்.
மேடு, பள்ளமான சாலை
இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் மசினகுடி-பொக்காபுரம் சாலையில் பல இடங்கள் குறுகலாகவும், மேடு-பள்ளங்களாகவும் இருப்பதால், போக்குவரத்து பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது.
இதன் காரணமாக பக்தர்கள் மட்டுமின்றி போலீசார் மற்றும் அதிகாரிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மசினகுடியில் இருந்து பொக்காபுரம் செல்லும் சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டும் குறுகலாக உள்ள இடத்திலும், மேடு-பள்ளங்களமாக உள்ள இடத்தையும் சமப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.
வனத்துறை தடை
இந்த நிலையில் மசினகுடியில் இருந்து பொக்காபுரம் செல்லும் சாலையில் கரையோரம் கற்கள், மணல் போட்டு சமப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.
இதை அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து சாலையை சமப்படுத்தும் பணிக்கு தடை விதித்தனர். இதனால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, விழா காலங்களில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பல மணி நேரம் காத்துக்கிடந்து அம்மனை தரிசித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைக்கு, வனத்துறை தடை விதித்ததை ஏற்க முடியாது என்றனர்.