சாலையோர வியாபாரிகள் தர்ணா
சாலையோர வியாபாரிகள் தர்ணா
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரையில் அமர்ந்து தர்ணா
திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் (சி.ஐ.டி.யு.) செயலாளர் பாலன், சங்க தலைவர் முருகேசன், கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயபால் மற்றும் திருப்பூர் மத்திய பஸ் நிலையம் பகுதியில் தள்ளுவண்டி வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகள் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு நேற்று காலை வந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்கள் அளித்த மனுவில், 30 ஆண்டுகளாக மத்திய பஸ் நிலையம் பகுதியில் தள்ளுவண்டியில் 30-க்கும் மேற்பட்டோர் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களுக்கு இடையூறு இல்லாமல் கடலை, பொரி வியாபாரம் செய்து வந்தனர். பஸ்நிலையம் புதுப்பித்து கட்டும் பணி நடைபெற்றது. அதன்பிறகு பஸ் நிலையம் திறக்கப்பட்டும் கூட வெளியே தான் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது.
அடையாள அட்டை
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோர வியாபாரிளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனவே மத்திய பஸ் நிலையத்துக்குள் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் ஆய்வு செய்து அட்டை வழங்க வேண்டும். பெண் சாலையோர வியாபாரிகளுக்கு மாதாந்திர உதவித்தெகை ரூ.1,000 வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மேயர், ஆணையாளர் ஆய்வுக்கு வெளியூர் சென்றுவிட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேயர் தினேஷ்குமார் செல்போனில் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.