ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் திடீர் சாலை மறியல்; 400 பேர் கைது


ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் திடீர் சாலை மறியல்; 400 பேர் கைது
x

நெல்லை வண்ணார்பேட்டையில் பஞ்சப்படியை உடனே வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று காலை போராட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி தாணுமூர்த்தி மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச்சங்க தலைவர் சேதுராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்க நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், வெங்கடாசலம், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

7 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும். பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு உரிய பணப்பலனை வழங்க வேண்டும். கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் மறுக்கப்பட்டு வரும் சலுகைகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் நிர்வாகிகள் பழனி, ராஜன், நடராஜன், சுதந்திரம் மற்றும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மெயின் ரோட்டுக்கு வந்து திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 400 பேரை கைது செய்து, அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story