தனியார் ஆலை மேற்பார்வையாளர் தற்கொலை


தனியார் ஆலை மேற்பார்வையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 12 Nov 2022 1:00 AM IST (Updated: 12 Nov 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

கொங்கணாபுரம் அருகே தனியார் ஆலை மேற்பார்வையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

எடப்பாடி:-

ஆட்டையாம்பட்டி அருகே உள்ள ஹைஸ்கூல் மேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 33). இவரது மனைவி ரதிபாலா (30). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ரதிபாலா சீரகாபாடி அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார்.

இதே போல் சந்திரசேகர் கொங்கணாபுரம் அருகே உள்ள எட்டிக்குட்டை மேடு பகுதியில் செயல்பட்டு வரும் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான பருப்பு ஆலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சந்திரசேகர் அண்மையில் தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் முறைகேடு செய்ததாக கூறி, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனிைடயே கடந்த 8-ந் தேதி அன்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் சந்திரசேகருக்கு போன் செய்து, நிறுவன உரிமையாளர் அழைப்பதாகவும் நேரில் வந்து அவரை சந்திக்குமாறும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 9-ந் தேதி அன்று அப்பகுதிக்கு சென்ற, சந்திரசேகர் எட்டிகுட்டை மேடு பஸ் நிறுத்தத்தில் மயங்கி கிடந்துள்ளார்.

இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சந்திரசேகர், தான் பூச்சி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து சந்திரசேகருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்திரசேகர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்திரசேகரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story