பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
செங்கோட்டையில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.
செங்கோட்டை:
செங்கோட்டையில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.
குடிநீர் பற்றாக்குறை
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை ஊராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு மற்றும் 12- வது வார்டு பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 12-வது வார்டு கவுன்சிலரான முத்துமாரி என்பவர் புளியரை பகுதியில் உள்ள திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அந்த போராட்டம் கைவிடப்பட்டது.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் 11-வது மற்றும் 12-வது வார்டு பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை கூட்டம் செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று தாசில்தார் கந்தசாமி தலைமையில் நடந்தது. 11-வது வார்டு மற்றும் 12-வது வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சாலைமறியல்
பேச்சுவார்த்தையின்போது, இரண்டு வார்டுகள் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றவே 11-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளியேறி தாலுகா அலுவலகம் முன்புள்ள கொல்லம் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைக்குழந்தைகளுடன் பல பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமாதானம்
இதுபற்றி தகவல் கிடைத்ததும் தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அங்கு வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தார்.
ஆனாலும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலையின் ஓரமாக நின்று 11- வது வார்டு பொதுமக்கள் வலியுறுத்தினார்கள்.
இதுதொடர்பாக தென்காசி துணை சூப்பிரண்டு நாகசங்கர், தாசில்தார் கந்தசாமி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
திடீர் சாலைமறியல் போராட்டத்தால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது