இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு சாலை மறியல்


இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு சாலை மறியல்
x

அரக்கோணம் அருகே இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அமைச்சர் ஆர்.காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அமைச்சர் ஆர்.காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார்.

சாலை மறியல்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தண்டலம் கிராமம் அகத்தியர் நகர் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் நில எடுப்பு செய்யப்பட்டது. அந்த பகுதியில் குறிப்பிட்ட சர்வே எண்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் தங்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் என கோரி அரக்கோணம் - சோளிங்கர் நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் சண்முகசுந்தரம், தண்டலம் கிராம நிர்வாக அலுவலர் பரிதி இளம்வழுதி மற்றும் அரக்கோணம் தாலுகா போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

அமைச்சர் காந்தி

அப்போது சோளிங்கரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை செல்வதற்காக அந்த வழியாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வந்தார். பின்னர் அவர் கூட்டமாக இருப்பதை கண்டு காரில் இருந்து இறங்கி சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினார்.

அப்போது அவர்கள், குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் சிலருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளனர். அதேபோல் வீட்டு மனை இல்லாத தங்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர் காந்தி அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதி அளித்து கோரிக்கை மீதான மனுக்களை பெற்றார். பின்னர் அதிகாரிகளை அழைத்து அதற்கான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அமைச்சர் காந்தி உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story