ஊட்டியில் பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம்


ஊட்டியில் பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம்
x

ஊட்டியில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த மழை

நீலகிரி, கோவை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஊட்டியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. கடும் குளிர் நிலவியது. இதனால் விடுமுறை நாளான நேற்று ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

அவர்கள் குளிரை போக்க கம்பளி ஆடைகளை அணிந்தபடி சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தனர். மதியம் 12 மணி முதல் 2 மணி வரை ஊட்டியில் பலத்த மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தாவரவியல் பூங்கா

மழையால் ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளிகள் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் நடந்து செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். இதேபோல் பலத்த மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. மிதி படகு, துடுப்பு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் மழைக்கு ஒதுங்கி நின்றனர். 2 மணி நேரத்திற்கு பின்னர் படகுகள் மீண்டும் இயக்கப்பட்டது.

சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, கூட்ஷெட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதன் பின்னர் மாலை 3 மணிக்கு பிறகு மழை நின்று விட்டது. சுற்றுலா தலங்களில் மழையில் நனையாமல் இருக்க சுற்றுலா பயணிகள் குடைகளை பிடித்தபடி நடந்து சென்று கண்டு ரசித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. மேலும் மழையும் பெய்ததால் ஊட்டி-குன்னூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் லவ்டேல் சந்திப்பு பகுதியில் இருந்து மஞ்சனக்கொரை, ஊட்டி பஸ் நிலையம் வழியாக வாகன ஓட்டிகள் சென்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

கோத்தகிரியிலும் நேற்று பலத்த மழை பெய்தது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மார்கெட்டுக்கு வந்த பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி சென்றனர். காம்பாய் கடையில் இருந்து செல்லும் சாலையோரம் உள்ள நீரோடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த தண்ணீர் சாலையில் வழிந்தோடி சென்றதுடன், அங்கேயே தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாததால், வாகன ஓட்டிகள் சிறிது நேரம் வாகனங்களை அங்கேயே நிறுத்தினர்.


Next Story