சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
கடலூரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூரில் தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கம்(சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், நகர விற்பனைக்குழுவிற்கான தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும், அனைத்து சாலையோர மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டி வழங்க வேண்டும், சந்தை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், சாலையோர வியாபாரிகள் சட்டத்தின்படி வாடகை தீர்மானம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்வரன் தலைமை தாங்கினார். கடலூர் மாநகர செயலாளர் சேட்டு, பகத்சிங் தள்ளுவண்டி சங்க தலைவர் கணேசன், மாவட்ட துணை தலைவர் குப்பம்மாள், விருத்தாசலம் செயலாளர் முகமது இதயத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கருப்பையன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பழனிவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சங்கமேஸ்வரன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன், மாவட்ட இணை செயலாளர் திருமுருகன், மாவட்ட துணை தலைவர் சுப்புராயன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.