காளை விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
கே.வி.குப்பம்
காளை விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
லத்தேரியை அடுத்த சோழமூர் ஊராட்சி, ராமாபுரம் கிராமத்தில் கங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு 71-ம் ஆண்டாக காளை விடும் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் திரண்டு வந்து இருந்தனர். விழாவுக்கு 126 மாடுகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. இவற்றில் 5 மாடுகள் வயது குறைவால் நிராகரிக்கப்பட்டன. பரிசோதனைக்குப்பின் பிள்ளையார் கோவில் அருகில் அமைக்கப்பட்டு இருந்த வாடிவாசலில் இருந்து 121 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஓட அனுமதிக்கப்பட்டன.
குறித்த நேரத்தில் எல்லையைக் கடந்த காளைகளுக்கு அறிவிக்கப்பட்டபடி முதல் பரிசு ரூ.1 லட்சம், 2-வது பரிசு ரூ.80 ஆயிரம், 3-வது பரிசு ரூ.70 ஆயிரம் என மொத்தம் 71 பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் முட்டியதில், 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 மாடுகள் லேசான காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றன.
முன்னதாக விலங்குகள் நல்வாழ்வு அலுவலர் மிட்டல், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, தாசில்தார் அ.கீதா, காட்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு பழனி, லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், பனமடங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிடத்து துணை தாசில்தார் வடிவேலு, ஊராட்சி மன்ற தலைவர் விஜயராணி சுந்தரம், வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் குமரன் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர். கொளுத்தும் கத்தரி வெயிலையும் பொருட்படுத்தாத பொதுமக்கள் முடிவில் லேசாக பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
==========