மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறித்த கொள்ளையன் கைது
களியக்காவிளையில் மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறித்த ெகாள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
களியக்காவிளை,
களியக்காவிளையில் மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறித்த ெகாள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
நகை பறிப்பு
களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம், கூட்டப்புளியைச் சேர்ந்தவர் ஷைனி (வயது42). இவர் களியக்காவிளை கோழிவிளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மதியம் வீட்டுக்கு செல்வதற்காக கோழிவிளையில் இருந்து கூட்டப்புளி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது பின்னால் ஸ்கூட்டரில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் ஷைனியின் அருகே வந்ததும் பின்னால் இருந்த நபர் அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பின்னர் இருவரும் ஸ்கூட்டரில் வேகமாக தப்பி ெசன்றனர்.
கொள்ளையன் கைது
இதுகுறித்து ஷைனி கொடுத்த புகாரின் அடிப்படையில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திருவனந்தபுரம் குட்டைமலை வடக்கமலையை சேர்ந்த ஜெபின் ஜோணி (30) என்பவர் தனது கூட்டாளியுடன் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் கேரளாவுக்கு சென்று ஜெபின் ஜோணியை கைது செய்து களியக்காவிளைக்கு கொண்டு வந்தனர்.
பல்வேறு இடங்களில் கைவரிசை
அவரிடம் நடத்திய விசாரணையில் ஜெபின் ஜோணி கேரள மாநிலம் முழுவதும் இருசக்கர வாகன திருட்டு, பெண்களிடம் நகை பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 25-க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளனர். அவரை கேரள போலீசார் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் அவர் தமிழக போலீசாரிடம் சிக்கியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.