கள்ளக்குறிச்சி அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி முகமூடி கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கள்ளக்குறிச்சி அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களை போலீசாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியின் முன்பு ஏ.டி.எம். மையம் உள்ளது. கிராமம் என்பதால், இரவு நேரத்தில் ஏ.டி.எம். மையத்தின் கதவு பூட்டி வைக்கப்படுவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு இந்த மையத்தின் கதவு பூட்டி இருந்தது. இரவில் முகமூடி அணிந்து வந்த 2 கொள்ளையர்கள் ஏ.டி.எம். மையத்தின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்து அபாய ஒலி அடித்தது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடோடி வந்தனர். இதை பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து வங்கியின் அலுவலர் சத்தீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.