சார்பதிவாளர் வீடு உள்பட 2 வீடுகளில் 7½ பவுன்; ரூ.35 ஆயிரம் கொள்ளை
நீடாமங்கலத்தில் சார்பதிவாளர் வீடு உள்பட 2 வீடுகளில் 7½ பவுன், ரூ.35 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நீடாமங்கலத்தில் சார்பதிவாளர் வீடு உள்பட 2 வீடுகளில் 7½ பவுன், ரூ.35 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சார்பதிவாளர்
திருவாரூர் நீடாமங்கலம் ராயல் சிட்டி பகுதியில் வசித்து வருபவர் தனபால் (வயது56). ஈரோட்டில் சார்பதிவாளராக (பொறுப்பு) பணியாற்றி வருகிறார். கடந்த 14-ந் ேததி இவர் குடும்பத்தினருடன் சென்னை சென்று விட்டார். இவருடைய வீட்டின் மாடி பகுதியில் 2 வீடுகள் உள்ளன.
இதில் ரெயில்வே சிக்னல் பிரிவில் பணியாற்றும் மணப்பாறையை சேர்ந்த இன்பென்ட்ரெனோ (29) என்பவர் ஒரு வீட்டிலும், ரெயில்வே பொறியியல் பிரிவில் பணியாற்றும் பிரவீன்ராஜ் (36) என்பவர் மற்றொரு வீட்டிலும் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
பிரவீன்ராஜ் தனது குழந்தையை பார்ப்பதற்காக வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள மனைவியின் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் மர்மநபர்கள் தனபால் வீட்டின் பின்பக்கம் வழியாக வீட்டினுள் நுழைந்து முன்பக்கம் வந்து அங்குள்ள கதவை உடைத்து வீட்டினுள் சென்று பீரோவை உடைத்து திருடி உள்ளனர். மாடி பகுதியில் இன்பென்ட்ரெனோ வீட்டில் இருப்பதை அறிந்த மர்மநபர்கள் அவருடைய வீட்டின் வெளிபக்க தாழ்ப்பாளை போட்டுவிட்டு, பக்கத்தில் உள்ள பிரவீன்ராஜ் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவையும் உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர்.
போலீசார் விசாரணை
காலையில் தூங்கி எழுந்த இன்பென்ட்ரெனோ தனது வீட்டு கதவின் முன்பக்க தாழ்ப்பாள் போடப்பட்டுள்ளதை அறிந்து திடுக்கிட்டார். உடனடியாக பிரவீன்ராஜுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதேபோல வீட்டின் உரிமையாளருக்கும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் தாழ்ப்பாளை திறந்து விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
7½ பவுன் நகைகள்
விசாரணையில் பிரவீன்ராஜ் வீட்டில் ரூ.30 ஆயிரம், 7 பவுன் நகைகளும், தனபால் வீட்டில் அரை பவுன் நகை, ரூ.5 ஆயிரம், சில வெள்ளி பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மர்ம நபர்கள் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்து விட்டு திருடி உள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் பெட்டியை (புட்டேஜ் பாக்ஸ்) கழற்றி கையோடு எடுத்து சென்று கைவரிசை காட்டி உள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வலைவீச்சு
கொள்ளை நடந்த வீட்டில் தடயவியல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், மோகன் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.