பட்டுக்கோட்டையில் முன்னாள் தலைமை ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகைகள்-ரூ.5 லட்சம் கொள்ளை


பட்டுக்கோட்டையில்  முன்னாள் தலைமை ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகைகள்-ரூ.5 லட்சம் கொள்ளை
x

பட்டுக்கோட்டையில், முன்னாள் தலைமை ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில், முன்னாள் தலைமை ஆசிரியை வீட்டில் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

முன்னாள் தலைமை ஆசிரியை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள கோட்டை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாடியம்மாள்(வயது 49). இவர், பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் தங்கராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து நாடியம்மாள் தலைமை ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று தனது வீட்டில் நியூட்ரிசன் சென்டர் வைத்து நடத்தி வருகிறார்.

பூட்டு உடைப்பு

கடந்த 13-ந் தேதி சென்னையில் நடந்த மகளின் வளைகாப்புக்காக அங்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல நியூட்ரிசன் சென்டரில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அங்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர்கள் பட்டுக்கோட்டையில் உள்ள நாடியம்மாளின் தங்கை ராசாத்தியிடம் தகவல் கூறியுள்ளனர். ராசாத்தி வந்து பார்த்து விட்டு, இதுகுறித்து சென்னையில் இருந்த தனது சகோதரி நாடியம்மாளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவித்தார்.

40 பவுன் நகைகள்-ரூ.5 லட்சம் கொள்ளை

அதன்ேபரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரிதிவிராஜ் சவுகான், தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பாத்திரங்கள், ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

போலீஸ் மோப்ப நாய் சோதனை

இதையடுத்து போலீசார் தஞ்சையில் இருந்து மோப்ப நாய் 'டபி'யை வரவழைத்து துப்பு துலக்கும் பணியை மேற்கொண்டனர். மோப்ப நாய் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீடு முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் இருந்து நாடியம்மாள் வந்த பிறகே கொள்ளைபோன பொருட்களின் முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

வலைவீச்சு

பட்டுக்கோட்டை நகர பகுதியில் நடந்த இந்த கொள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story