திங்களூர் சந்திரன் கோவிலில் கொள்ளை முயற்சி
திங்களூர் சந்திரன் கோவிலில் கொள்ளை முயற்சி
திருவையாறு,
திருவையாறு அருேக உள்ள திங்களூர் சந்திரன் கோவிலில் கொள்ளையர்கள், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அலாரம் ஒலித்ததால் லட்சக்கணக்கான பணம் தப்பியது.
திங்களூர் சந்திரன் கோவில்
தஞ்சை அருகே உள்ள திருவையாறை அடுத்த திங்களூரில் கைலாசநாதர் கோவில் உள்ளது.
நவக்கிரக கோவில்களில் இரண்டாவது ஸ்தலமாக விளங்கும் சந்திரன் கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாது வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கைலாசநாதர் மற்றும் சந்திர பகவானை தரிசனம் செய்து செல்வார்கள்.
அலாரம் ஒலித்தது
நேற்று இரவு பூஜை முடிந்ததும் வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு கோவில் பணியாளர்களும், சிவாச்சாரியார்களும் வீட்டுக்கு சென்று விட்டனர். கோவிலில் பணிபுரியும் இரவு காவலர் திங்களூரை சேர்ந்த புண்ணியமூர்த்தி(55) என்பவர் கோவிலில் படுத்து இருந்தார்.
நள்ளிரவில் கோவிலில் இருந்த அலாரம் ஒலிக்கும் சத்தம் கேட்டது. உடனே புண்ணியமூர்த்தி எழுந்து கோவிலை சுற்றிப்பார்த்தார். அப்போது கோவிலின் கிழக்குப்புற வாசல் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
கொள்ளை முயற்சி
உடனடியாக அவர் இதுகுறித்து கோவில் கணக்கர் சிவக்குமார்(42) என்பவருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் சிவக்குமார் இதுகுறித்து திருவையாறு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தனர்.
அப்போது கோவில் கிழக்கு வாசல் வழியாக மர்ம மனிதர்கள் 2 பேர் சுவர் ஏறி குதித்து பூட்டை உடைத்து உள்ேளவர முயற்சி செய்ததும், அப்போது கோவிலில் வைக்கப்பட்டு இருந்த அலாரம் ஒலித்த சத்தம் கேட்டு கொள்ளையர்கள் தங்களது கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதும் தெரிய வந்தது.
வலைவீச்சு
கோவிலில் இருந்த அலாரம் ஒலித்ததால் கோவிலில் கொள்ளை சம்பவம் எதுவும் நடக்கவில்லை.
இதுகுறித்து கோவில் கணக்கர் சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கோவிலுக்குள் கொள்ளையடிக்க வந்த மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.