டாஸ்மாக்கடையில் அரிவாளை காட்டி ரூ.1½ லட்சம் கொள்ளை


டாஸ்மாக்கடையில் அரிவாளை காட்டி ரூ.1½ லட்சம் கொள்ளை
x

அருப்புக்கோட்டை அருகே முககவசம் அணிந்து வந்து டாஸ்மாக்கடையில் அரிவாளை காட்டி ரூ.1½ லட்சம் கொள்ளை அடித்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,


அருப்புக்கோட்டை அருகே முககவசம் அணிந்து வந்து டாஸ்மாக்கடையில் அரிவாளை காட்டி ரூ.1½ லட்சம் கொள்ளை அடித்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் கடை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடியில் ஊருக்கு ஒதுக்குபுறமாக அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சூப்பர்வைசராக சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த முருகனும், விற்பனையாளராக அருப்புக்கோட்டை புதுத்தெருவை சேர்ந்த மருதுபாண்டியும், காவலாளியாக கட்டங்குடியை சேர்ந்த சண்முகவேலும் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று இரவு கடையை மூடும் நேரத்தில் லேசான சாரல் விழுந்தது. இதனால் யாரும் கடைக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

ரூ.1½ லட்சம் கொள்ளை

அப்போது 2 மோட்டார் சைக்கிளில் முக கவசம் அணிந்து வந்த 5 மர்மநபர்கள் கையில் அரிவாளுடன் கடைக்கு வந்தனர். அப்போது 3 பேர் காவலாளியின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டினர்.

மற்ற 2 பேரும் கடைக்குள் புகுந்து சூப்பர்வைசர், விற்பனையாளர் ஆகியோரிடம் மது விற்ற பணத்தை எடுத்து தரும் படி மேசையில் அரிவாளால் ஓங்கி அடித்துள்ளனர். இதையடுத்து மது விற்ற ரூ.1½ லட்சம் மற்றும் விற்பனையாளர், காவலாளி ஆகியோரின் செல்போன்களை கொள்ளை அடித்து விட்டு அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்திபன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். தடயவியல் நிபுணர்களும் டாஸ்மாக்கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story