குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன போக்குவரத்து பாதிப்பு.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை காட்டேரி பூங்கா மற்றும் மரப்பாலம் இடையே 13-வது கொண்டை ஊசி வளைவு மலைப்பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. பின்னர் பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் பாறை ஒன்று உருண்டோடி மரத்தின் மீது விழுந்ததால், ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. அந்த சமயத்தில் வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மலைப்பாதையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இந்தநிலையில் போலீசார், தீயணைப்புத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் வந்து சாலையில் விழுந்த மரம், பாறைகளை 3 மணி நேரத்திற்கு பின்னர் அகற்றினர். அதன்பின் போக்குவரத்து சீரானது.