திண்டுக்கல் அருகே ஓடும் ரெயில் மீது உருண்டு விழுந்த பாறை கற்கள்: அதிர்ந்த பயணிகள்
திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பாறைகள் உருண்டு விழுந்தன.
திண்டுக்கல்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மாலை 6:15 மணி அளவில் திண்டுக்கல்லை அடுத்த கொடைரோடு-அம்பாத்துறை வழித்தடத்தில் வந்து கொண்டிருந்தது. இந்த வழித்தடம் மலைகளை குடைந்து அமைக்கப்பட்டது ஆகும். .அந்த வழியாக ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ரெயில் பெட்டி மீது பாறை கற்கள் விழுந்தன.
இதில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த கரூரை சேர்ந்த வினோத் என்பவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் இருக்கைகளை விட்டு எழுந்தனர். பின்னர் அவசர அவசரமாக ஜன்னல் கதவுகளை மூடினர். அதேநேரம் ரெயிலும் நிறுத்தப்படவில்லை. தொடர்ந்து திண்டுக்கல் ரெயில் நிலையத்தை ரெயில் அடைந்ததும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கற்கள் பட்டதில் காயமடைந்த வினோத்துக்கும் ரெயில்வே டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் ரெயில்வே போலீசார் ஆய்வு நடத்தினர். மர்ம நபர்கள் யாரேனும் மலையில் இருந்து பாறை கற்களை பெயர்த்து எடுத்து ரெயில் மீது வீசியிருப்பார்களோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியிலேயே போலீசார் மறைந்து நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஓடும் ரெயில் மீது பாறை கற்கள் உருண்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.